மாத்தி யோசி
12.28.2011
12.26.2011
ஈபுக் ரீடர் என்பது புத்தகங்களை மின்திரையில் படிப்பதற்கான ஒரு கருவி.கிட்டத்தட்ட ஒரு புத்தக அளவுக்குத் திரை இருக்கும்.நீங்கள் சாய்த்து திருப்புவதற்கு ஏற்றவாறு திரையும் தகவமைத்துக் கொள்ளும். PDF, Word போன்ற வழமையான கோப்பு வடிவங்களையும் திறந்து கொள்ளலாம் என்றாலும் ஈபுக் ரீடரின் தயாரிப்பு நிறுவனங்களே விற்கும் மின்புத்தகங்கள் தனித்துவமான கோப்பு வடிவைக் கொண்டவை.உதாரணமாக, அமேசான் எனும் புத்தக விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ள கிண்டில் எனும் மின்வாசிப்பு கருவிக்காக அறுபதினாயிரத்துக்கு மேற்பட்ட மின்புத்தகங்களை அந்நிறுவனம் பிரசுரித்துள்ளது.ஆனால் இப்புத்தகங்களைப் பிற நிறுவன மின்வாசிப்பு கருவிகளில் படிக்க முடியாது.அதற்கு கிண்டிலுக்கான மென்பொருளொன்றைப் பதிவிறக்கி இணைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, தொழில்நுட்பம் தகவல் மற்றும் காட்சி ஊடகங்களை அணுகுவதையும் பயன்பாட்டையும் மிகவும் எளிதாக்கி வரும் நேரத்தில், புத்தகவாசிப்பு மற்றும் வாங்கலை அது மேலும் சிரமமானதாகவும்,சிக்கலானதாகவும் மாற்றி வருகிறது. நீங்கள் விரும்புகிற பாடல் அல்லது படத்தை நினைத்த நேரத்தில் சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்குள் பதிவிறக்கி அல்லது streaming வடிவில் கேட்டுப் பார்த்திட முடியும். மரபான முறையில் திரையரங்குக்குச் செல்வதில் அல்லது டி.வி.டி. வாங்கிப் பயன்படுத்துவதில் இருந்து இலவசமாய் பதிவிறக்குவது அதைப் பிறருடன் பகிர்வது வரை தொழில்நுட்பம் வேறு கலாச்சார வடிவங்களை நுகர்வதை எளிதாக்கியது போல் புத்தகங்களுக்கு நிகழவில்லை. தொழில்நுட்பம் புத்தகப் பதிப்பை மட்டுமே லகுவாக்கியது. ஆனால் விலைகளில் ஒன்றும் மாற்றமில்லை. முக்கியமான புத்தகங்களை வாங்க நீங்கள் இன்றும் ஆயிரங்களில் செலவழிக்க வேண்டும். அடுத்து, கணினிப் பயன்பாடு மனிதனுக்குப் பொருளாதார மற்றும் கலாச்சாரத் தளங்களில் ஓராயிரம் கதவுகளைத் திறந்து வைத்து அவனை விடுதலைப்படுத்தி உள்ள நிலையில் வாசிப்புக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கும் முரண்பாடு நிலவுகிறது. புத்தொளி யுகத்தில் கேக்ஸ்டனின் பதிப்பு எந்திரக் கண்டுபிடிப்பால் ராட்சத வளர்ச்சி அடைந்து மக்களின் அறிவு மற்றும் கலாச்சார வெளியை ஆக்கிரமித்த புத்தகங்கள் நவீன யுகத்தில் வாசலில் மேலும் பரிணமிக்காமல் துவண்டு நின்று விட்டன.
நவீன காலத்துக்கு ஏற்றபடி புத்தகங்களைப் பரிணமிக்க வைக்கும் முயற்சியாகத்தான் அமேசான் நிறுவனம் கிண்டிலை 2007-இல் அறிமுகப்படுத்தியது. அமேசான் நிறுவனம் தான் இதுவரை மில்லியன் கணக்கில் கிண்டில்களை விற்றுள்ளதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, கடந்த கிறித்துமஸின்போது அமேசானில் இருந்து அதிகம் வாங்கப்பட்ட பரிசுப்பொருள் கிண்டில்தானாம். ஆனால் சரியான எண்ணிக்கையைச் சொல்ல அமேசான் மறுத்து விட்டது. அடுத்து, தற்போது கெட்டி அட்டைப் புத்தகங்களை விட மின்புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆவதாக மற்றொரு பரபரப்பை அமேசான் உருவாக்கி உள்ளது. அதாவது 100 பதிப்பு புத்தகங்களுக்கு 180 மின்புத்தகங்கள் விற்பனை ஆகிறதாம். கடந்த ஆறுமாதங்களில் மட்டும் கிண்டில் விற்பனை மும்மடங்கு ஆகியுள்ளதாம்.இணைய விமர்சகர்களுக்கு இந்த தகவல்களிடத்து சற்று அவநம்பிக்கை இருந்தாலும் புத்தக உலகில் கிண்டிலின் இடத்தை மறுப்பதற்கு இல்லை.அமேசானோடு போட்டியிட்டு சந்தையைப் பிடிக்க Sony, eGriver, Slex ereader, nook, iPapyrus 6, Pocketbook, Cool-er, Cybook என்று ஏராளமான நிறுவனங்கள் மின்வாசிப்பு கருவிகளை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் கிண்டில், சோனி, நூக் ஆகியவை முன்னிலையில் உள்ளன. Infi Beam என்ற இந்திய நிறுவனம் Piஎன்றொரு மின்புத்தகக் கருவியை வெளியிட்டுள்ளது. இருப்பதிலே விலை மலினம் Pi தான் – 9999. இக்கருவியில் இந்திய மொழி நூல்கள் படிக்க முடியும்.ஆனால் கிண்டிலில் உள்ளது போல் பதிவிறக்க, தட்டச்சு செய்ய வசதி இல்லை.
கிண்டில் போன்ற அயல்நாட்டு வாசிப்புக் கருவிகள் இந்தியாவில் இன்னும் பிரபலமாக இல்லை. இதற்கு விலை ஒரு பிரதான காரணம்.ஆப்பிள் நிறுவனம் ஐபேட்டை அறிமுகப்படுத்தியதும் கிண்டில்.விலையை அமேசான்189 டாலராகக் குறைத்தது.உடனே நூக் விலையை Barnes and Noble 199 டாலராகக் குறைத்தது. ஐபேடில் மின்புத்தகம் வாசிக்கும் வசதி அமேசான மின்புத்தகங்களின் சமீப விற்பனை உயர்வுக்கு மறைமுகமாக உதவியது. இது அமெரிக்கர்களுக்குத் தான் அதிகம் பயன்பட்டது. இந்தியாவில் கிண்டில் வாங்க 189 டாலரோடு கிட்டத்தட்ட 5000ரூபாய் நாம் உபரியாக வரி செலுத்த வேண்டும். மின்புத்தகக் கருவிகளில் உள்ள முக்கியமான வசதி சில நொடிகளில் Wifi மூலம் நீங்கள் புதிய நூல்களை(பணம் செலுத்தி) தரவிறக்கிப் படிக்கலாம் என்பது. அதோடு பதிப்பு நூல்களில் இருந்து சற்று விலை குறைவாகவும் மின் நூல்கள் இருக்கும். ஆனால் மின்புத்தகக் கருவியில் இருந்து நேரடியாகத் தரவிறக்குவதற்கான Wifiதொடர்புநிலை இந்தியாவில் சீராக இல்லை என்று பயனர்கள் கருதுகிறார்கள்.இத்தனை செலவு செய்து சிரமப்படுவதற்கு புத்தகமாகவே வாங்கி விடலாம் அல்லவா?
மின்புத்தகங்களைப் பற்றி உலகமே அல்லோலகல்லோப்பட்டுக் கொண்டிருக்கும்போது இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், எந்த சலனமும் இல்லை. இத்தனைக்கும் உலகம் எங்கும் இருந்து இணையம் வழி தமிழில் வாசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக லட்சக்கணக்கான பக்கங்கள் இலவசமாக எழுதப்பட்டு பதிவேற்றப்படுகின்றன.இணையப்பதிவர்கள் மரபான பத்திரிகைகளுக்குள் நுழைகிறார்கள். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்ட முக்கியமான புத்தகங்களில் பல இணையத்தில் வாசிக்க எழுதப்பட்டவை.தமிழ் இணையத்தால் புதிய வாசகர்கள் அறிமுகமாகி புத்தக விற்பனை அதிகமாகி உள்ளது. ஆனால் பதிப்பாளர்களுக்குத் தங்கள் நூல்களின் மின்பிரதிகளை வெளியிடுவதில் பெரும் தயக்கம் உள்ளது. இதற்கு கிண்டில் போன்ற மின்வாசிப்புக் கருவிகள் இங்கு சந்தையில் கிடைக்காததும், அதனை ஒட்டிய மின்புத்தகத் தரவிறக்க வியாபாரம் இல்லாமையும் ஒரு காரணம்.Piracy எனப்படும் புத்தகத் திருட்டுப் பிரசுரம் மீதான அச்சம் அதைவிட முக்கியமான காரணம். இங்கு நாம் பைரஸி எனப்படும் திருட்டைக் குறித்து மேலும் சிந்திக்க வேண்டும். ஆழமாக ஆராய்கையில் இங்கு நம் பதிப்பாளர்கள் ஒரு சிறந்த வணிக மாடலைக் கோட்டை விடுகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
ஐம்பது பைசா மிட்டாய் மற்றும் முப்பது ரூபாய் டி.வி.டி.யில் இருந்து ஆயிரக்கணக்கான விலை உள்ள கைக்கடிகாரம் வரை சந்தையில் இன்று மலிந்து கிடக்கும் போலிப் பொருட்களுக்கும் திருட்டுப் பதிப்பு நூல்களுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு. திருட்டுப் பதிப்பால் பதிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இத்தகைய புத்தகங்களின் நுகர்வோர் அசல் நூல்களை எப்படியும் வாங்கப் போவதில்லை என்பது மற்றொரு தரப்பு.இந்தியாவின் ஒரே கலாச்சார ஊடகமாக நிகழும் சினிமாவுக்கு இதை நிச்சயம் பொருத்த முடியாது. திருட்டு டி.வி.டி.கள் சினிமா தொழிலை நிச்சயம் அழிக்கின்றன. ஆனால் வில் டியூரண்டின் The Story of Philosophy ஐ நடைபாதைக் கடையில் ஐம்பது ரூபாய்க்கு வாங்கும் வாசகன் ஐநூறு செலவழித்து அதை வாங்கும் வாய்ப்பு குறைவே. வசதியற்றவர்களுக்கு புத்தகங்களை ஜனநாயகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த திருட்டு சந்தைப் புத்தகங்களைக் காணலாம். கோடீஸ்வரர்களான பல சர்வதேச எழுத்தாளர்களுக்கும் இந்த திருட்டுப் பதிப்பால் பெரும் பாதிப்பில்லை எனலாம். பாடல் மற்றும் படங்கள் இணையத்தில் திருட்டு விற்பனையாவதில்லை; அவை திருட்டுப் பிரதியெடுக்கப்பட்டு இலவசமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. திருட்டுப் புத்தகங்களுக்கு சொல்லப்பட்ட தர்க்கம் ஓரளவுக்கு இந்தப் பாடல்/பட பிரதியெடுப்பு மற்றும் இலவசப் பகிர்தலுக்கும் பொருந்தும்.இருட்டில் துழாவி எடுப்போர் பகலில் அப்பொருளை வாங்கப் போவதில்லை. மேலும் இணையத்தில் அனைத்தும் இலவசம் என்ற மதிப்பீடு நிலவுவதால் காப்புரிமை மீறல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது.உங்கள் கணினியில் நீங்கள் தட்டச்சும் சிறு சொல் அல்லது தகவல் கூட இன்று பாதுகாப்பாக இருப்பதில்லை. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து ஒருவர் அதை உங்களுக்குத் தெரியாமல் கவர்ந்து கொண்டிருப்பார்.ஆரம்பத்தில் ஐரோப்பிய இசை நிறுவனங்கள் காப்புரிமை விசயத்தில் மிகக் கறாராக இருந்து பார்த்தன. மீறி டி.வி.டி.யிலிருந்து பாடல் கோப்புகளைப் பிரதியெடுத்து இணையத்தில் பகிர்பவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. ஆனால் இந்நடவடிக்கை பலநூறு ஓட்டைகள் கொண்ட பிரம்மாண்ட தண்ணீர்த் தொட்டி ஒன்றை அடைக்க முயல்வது போல. விரைவிலேயே இது வீண் என்றுணர்ந்த சில நிறுவனங்கள் இணையத்தில் பாடல்களை சட்டபூர்வமாகப் பதிவிறக்கும் வசதியைக் கொண்டு வந்தன. Itunes நிறுவனம் கோடிக்கணக்கான பாடல்களை அறிமுக வருடத்திலேயே விற்றது. டி.வி.டி.களாக விற்பதை விட இது சுலபமும் லாபகரமுமானது என்று பல நிறுவனங்கள் புரிந்துகொண்டன. இங்கு ஆய்வாளர்கள் இரண்டு முடிவுகளுக்கு வருகிறார்கள். இன்றைய நுகர்வோனுக்கு பொருள் எளிதில் உடனே கிடைக்கும்படியாக அமைய வேண்டும். விலையும் நியாயமாக இருக்க வேண்டும். எந்தக் குற்றவுணர்வும் இன்றி நியாயமான விலையில் வாங்கவே நுகர்வோன் விரும்புகிறான். உலகம் தொடர்ந்து அபௌதிகமாக விர்ச்சுவலாக மாறி வரும் சூழலில் சந்தை இணையத்துக்குள் வரவேண்டிய, விற்பனைப் பொருள் இணைய வடிவம் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விலை அநியாயமானது என்று நுகர்வோருக்கு எண்ணம் ஏற்படுகையில் அது பைரஸிக்கு வழி வகுக்கிறது.Torrents, Limewire போன்ற கோப்பு-பகிரும் மென்பொருள் மற்றும் இணையத்தளங்கள் வழியாக மக்கள் ஒரு பொருளைப் பிரதியெடுத்துப் பகிர்வதற்கு அநியாய விலை தூண்டும் தார்மீகக் கோபமும் ஒரு முக்கிய காரணம். டியூக் பல்கலைக்கழகம் செய்துள்ள ஒரு ஆய்வில் ஒரு பாடலின் விலையை 0.63 டாலராகக் குறைத்தால் திருட்டுப் பிரதியெடுப்பு 50%குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
விலையை அடுத்து நுகர்வோனை எரிச்சல்படுத்துவது மரபான வாங்குதல் முறையில் உள்ள கால தாமதம். உதாரணமாக, சாரு நிவேதிதா, எஸ்.ரா அல்லது ஜெயமோகனின் நூல் வெளியிடப்பட மறுநொடியில் அதனை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று ஐஸ்லாந்து அல்லது லிபேரியாவில் வசிக்கும் ஒரு தமிழ் வாசகன் விரும்பினால் தமிழ் சூழலில் அது சாத்தியப்படுமா? ‘காலச்சுவடு’ சில மின்நூல்களை வெளியிட்டுள்ளது.அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் சில நூல்களும் மின்வடிவில் கிடைக்கின்றன. சங்கப்பலகை இணையத்தளத்தில் இவற்றை வாங்கலாம்.ஆனால் தமிழில் இதுவரையிலான பட்டியல் மிகவும் குறுகியது. மற்றபடி பெரும்பாலான முக்கிய நூல்களுக்கு இணையத்தளத்தில் ஆர்டர் கொடுத்து ஒரு வாரமோ ரெண்டு வாரமோ அதற்கு மேலோ காத்திருக்க வேண்டும். ஒரு ஆய்வாளனுக்கு அவசரமாக அ.கா. பெருமாளின் நாட்டாரியல் புத்தகமோ ஷாஜியின் இசை நூலோ உடனடியாகத் தேவைப்படுகிறதென்றால் முடியுமா?மேற்கில் இது அத்தனையும் சாத்தியம். காத்திருக்கும் அவகாசம் இன்மை இன்றைய தலைமுறையின் ஒரு ஆதாரப் பண்பாகவே மாறி விட்ட நிலையில் மரபான பதிப்பு நூல்கள் ஒரு அர்த்தத்தில் காலாவதி ஆகி விட்டன.
சில பதிப்பகங்கள் பௌதிக நூல்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றின் மின்பிரதிகளை வெளியிடுவதை தாமதப்படுத்துகின்றன. இந்த உத்தி வாசகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது;எரிச்சலைத் தூண்டுகிறது.பயணத்தின்போது ஒரு புதுநூலை மின்வாசிப்புக் கருவியில் படிக்க விரும்பும் வாசகரை இந்தக் கட்டாய தாமதம் திருட்டு மின்புத்தகத்தை நோக்கி செலுத்துகிறது. ‘எம்மி’ விருது பெற்ற எழுத்தாளரும், ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் பத்தியாளருமான ரேண்டி கோஹன் என்பவர் ஸ்டீபன் கிங்கின் சமீபத்திய நாவலான் "Under the Dome" இன் கெட்டி அட்டை நூலை வாங்கிய பின்னர் அவசியம் கருதி அதன் திருட்டு மின்பிரதியைத் தரவிறக்கி பயணத்தின் போது தான் படித்ததாக கூறுகிறார்.ஜெ.கெ ரௌலிங் தனது ‘ஹாரி போட்டர்’ நாவல்களை மின்புத்தகங்களாக வெளியிடுவதில்லை என்று முடிவு செய்தார். இது புத்தக விற்பனையை அதிகப்படுத்தும் என்று அவர் நம்பினார். ஆனால் அவரது நாவல்கள் வெளியான சில நாட்களிலே வாசகர்கள் மெனக்கட்டு ஸ்கேன் செய்தும்,தட்டச்சு செய்தும் மின்புத்தகங்களை இணையத்தில் உலவ விட்டார்கள்.தங்களுக்குப் பிரியமான எழுத்தாளருக்கு எதிராக வாசகர்கள் இப்படி செயல்பட்டதற்கு மூன்று காரணங்கள் சொல்லலாம். ஒன்று பழி வாங்க.அடுத்து, மின்வாசிப்புக் கருவிகளில் எடுத்துச் சென்று படிக்கும் சுயவசதிக்காக.அடுத்து நண்பர்களுடன் பகிர்தல் மூலம் தங்கள் வலைத் தொடர்பை விரிவாக்க.மின்பதிப்பை வெளியிட்டிருந்தால் திருட்டுத்தனமாக இணையத்தில் பெருகிய கோடிக்கணக்கான பிரதிகளுக்குப் பதில் அசலான மின்நூல்களை வாசகர்கள் வாங்கிப் படித்திருப்பார்கள். திருட்டுப் பதிப்புகளின் எண்ணிக்கையில் பாதியாவது மின்பதிப்பாக அவர் விற்றிருக்கலாம்.
இது ஒரு சுவாரஸ்யமான விவாதம். சாரு நிவேதிதா சமீபமாக ஒரு கட்டுரையில் தன் புத்தகங்களின் விற்பனை குறைந்ததற்கு வலைப்பக்கத்தில் அவர் எழுத்துக்கள் இலவசமாகக் கிடைப்பதே காரணம் என்று நொந்து கொண்டார். ஆனால் 66 மொழிகளில் நூறு மில்லியன் புத்தகங்களுக்கு மேல் விற்றுள்ள "ரசவாதி" புகழ் போல் கொயில்ஹோ தன் புத்தங்களின் திருட்டுப் பிரதிகளைத் தானே ஒருங்கிணைத்து வெளியிட்டார். இதை அவர் மிகவும் சாமர்த்தியமாக செய்தார். Torrents போன்ற கோப்பு பகிர்வு தளங்களுக்குச் சென்று தன் புத்தகங்களின் திருட்டு மின்பிரதிகளைத் திரட்டினார். Pirate Coelhoஎன்று ஒரு வலைப்பூ ஆரம்பித்து இந்நூல்களின் தொடுப்புகளை வெளியிட்டார்.பிறகு தனது சொந்த இணையத்தளத்தில் "இப்படி ஒரு திருட்டுப்பிரதி வலைப்பூவைத் தான் காணக் கிடைத்து அதிர்ச்சி அடைந்ததாக"அப்பாவித்தனமாக அறிவித்தார். இதன் மூலமாக எண்ணற்றோர் Pirate Coelhoவுக்குச் சென்றனர். ஆனால் இந்நிகழ்வால் கொயில்ஹோவின் பதிப்பு நூல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இலவசப் பிரதிகள் மக்களை மேலும் புத்தகங்கள் வாங்கத் தூண்டுவதாக கொயில்ஹோ கருதுகிறார். Baen எனும் பதிப்பகம் தனது பல எழுத்தாளர்களின் ஆரம்ப நாவல்களில் சிலவற்றை முழுமையாக இணையதளத்தில்(http://www.baen.com/library/) இலவசமாக வெளியிடுகிறது. இப்புத்தகங்களை தரவிறக்கிப் படிக்கும் வாசகர்கள் கவரப்பட்டு பதிப்பு நூல்களையும் வாங்கி விடுவதால், விற்பனை அதிகமாகி உள்ளதாய் இணையத்தளத்தின் நூலகர் எரிக் பிளிண்ட் கூறுகிறார். மேலும் வரலாற்றில் என்றுமே இலவசப் புத்தக வினியோகம் விற்பனையைத் தொலைநோக்கில் எதிர்மறையாய் பாதித்ததில்லை என்று கூறுகிறார். இது உண்மையில் ஒரு வளமான வாசக தளத்தை உருவாக்கப் பயன்படும் சிறந்த உத்தி என்கிறார் எரிக்.
தமிழ்ச்சூழலில் அதிகம் திருட்டுப் பிரதியாக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதாதான். ‘அழியாச்சுடர்கள்’ இணையதளத்தில் (http://azhiyasudargal.blogspot.com) தமிழ் தீவிர இலக்கியர்களின் சில முக்கிய படைப்புகள் இலவச வாசிப்புக்குக் கிடைக்கின்றன. இணையத்தில் எஸ்.ரா, ஜெ.மோ, சாரு போன்ற எழுத்தாளர்கள் இதுவரை பெற்றுள்ள கவனம் மற்றும் உருவாக்கி உள்ள வாசகத் தளத்தைக் கருத்திற் கொள்கையில் பரவலான மின்நூல் வெளியீடு நேர்மறையான பலன்களைத் தான் தரும் என்று கணிக்க முடிகிறது.எதிர்காலத்தில் மின்வாசிப்புக் கருவிகள் தமிழில் ஒருவேளை பரவலாகாத பட்சத்திலும் வேறுபல வாசல்கள் திறந்தபடிதான் இருக்கும். ஸாம்ஸங்கின் சமீப ஸ்மார்ட்ச் போன்கள் மின்வாசிப்புக் கருவி இணைக்கப்பட்டே வருகின்றன. எதிர்காலத்தில் மைக்ரோமேக்ஸ் நுண்பேசி போன்று குறைந்த விலைகளில் இத்தகைய ஸ்மார்ட் போன்கள் பெரிய திரை மற்றும் மின்வாசிப்புக் கருவியுடன் வரலாம். இந்த சாத்தியங்கள் எட்டும் தூரத்தில் உள்ள பட்சத்தில் தமிழில் நூல் பிரசுரத்தை வலுப்படுத்த மேலும் அதிக மக்களிடம் கொண்டு செல்ல மின்நூல்கள் பயன்படக் கூடும். ரெண்டாம் பதிப்பு வராத எத்தனையோ முக்கிய நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றின் இற்றுப்போன பழைய பிரதிகளைத் தேடி காலம் வீணடிக்காமல் இருக்கவும்,எதிர்காலத்துக்குப் பாதுகாத்து வைக்கவும் வாசகர்கள் இவற்றுக்கு மின்பிரதிகள் உருவாக்குவது தான் ஒரே வழி. அரிய புத்தகங்களின் பௌதிகப் பிரதிகளை நாம் பிறருக்குத் தர தயங்குவது சகஜம். ஆனால் மின்புத்தகங்களை யாருக்கும் தயக்கமின்றி வழங்கலாம். வாசிப்புச் சூழலை இது மேலும் ஆரோக்கியமாக மாற்றலாம். காப்புரிமை பற்றிக் கவலைப்படாமல் அற்புதமான நூல்களைக் கொடுத்து தொடர்ந்து மையநீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட/படுகிற எழுத்தாளர்கள் பலர். இவர்கள் போல் கொயில்ஹோ வழியில் ரகசியமாக pirate வலைப்பக்கங்கள் அமைத்துப் பார்க்கலாம். தங்கள் மீது தொடர்ச்சியான கவனத்தை ஏற்படுத்தலாம்.சேமிப்புப் பழக்கத்திற்காக புத்தகம் பொறுக்கும் எல்லைக்கு வெளியில் உள்ளோரையும் மையத்துக்கு இழுக்க பைரஸி பயன்படலாம். திருட்டு மின்பிரதி நிபுணரும் அமெரிக்க மென்பொருளாளருமான The Real Caterpillarஎன்பவரின் சுவாரஸ்யமான பேட்டி Themillions.com என்ற இணையத்தளத்தில் உள்ளது. இணைப்பு: http://www.themillions.com/2010/01/confessions-of-a-book-pirate.html.யாரேனும் மொழியாக்கி இதனை வெளியிடலாம்
பின்குறிப்பு: ‘உயிர்மை’ பதிப்பகம் வெளியிட்ட பொ.கருணாகரமூர்த்தியின்"பெர்லின் இரவுகள்" புத்தகத்தின் மின்பிரதி http://www.noolaham.org/வலைத்தளத்தில் இலவசமாக கிடைக்கிறது..இப்புத்தகத்தை தரவிறக்கப் போகிறவர்கள் எத்தனை பேர் உயிர்மையில் இருந்து வாங்கப் போகிறார்கள்?
நன்றி ஆர்.அபிலாஷ்
12.25.2011
சொத்டோங் மசாலா ( கனவாய் மீன் மசாலா )
சமைத்து அசத்தலாம்
சமையல்,அனுபவம்,கதை,கவிதை,பார்த்தது,ரசித்தது, படித்தது,பிடித்தது.
கணவாய் மசாலா - Squid Masala
தேவையான பொருட்கள் ;
கணவாய் மீன் - அரை கிலோ
வெங்காயம் - 100கிராம்
தக்காளி -100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2டீஸ்பூன்
கரம் மசாலா - கால்ஸ்பூன்
சோம்புத்தூள் - கால்ஸ்பூன்
மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
மிளகாய்த்தூள் - முக்கால்ஸ்பூன்
சீரகத்தூள் - முக்கால் ஸ்பூன்
மல்லித்தூள் - 2டீஸ்பூன்
மல்லி,கருவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
ஸ்குயிட் மீனை வாங்கி அதன் மேல் இருக்கும் மெல்லிய தோல் எடுத்து விடவும்,செவுள் உடன் சேர்த்து இழுத்தால் இலகுவாக வந்துவிடும்,உள்ளே இருக்கும் கழிவையும் எடுத்து விடவும்.நன்கு அலசி எடுக்கவும்.
பின்பு அதனை வளையம் வளையமாக நற்க்கி கொள்ளவும்.
மஞ்சள் தூள் போட்டு அலசி எடுக்கவும்.வடிகட்டவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்,வதங்கியதும்,இஞ்சி பூண்டு பேஸ்ட். கரம் மசாலா போட்டு வதக்கவும்.
நறுக்கிய தக்காளி,மல்லி இலை சேர்த்து பிரட்டவும்.
மஞ்சள் கால் ஸ்பூன் சேர்த்து பிரட்டவும், மற்ற மசாலா வகைகளை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி விடவும்.
சுத்தம் செய்த ஸ்குயிட்டை சேர்க்கவும்.
நன்கு பிரட்டி சிறிது உப்பு சேர்த்து, கருவேப்பிலை இரண்டு இணுக்கு சேர்க்கவும்.
குக்கரை மூடி 4விசில் வைக்கவும்.
திறந்தால் இப்படி இருக்கும்.நன்கு மசாலா சேரும் படி பிரட்டி விடவும். உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
சுவையான கணவாய் மசாலா ரெடி.
கணவாயை பல விதமாக சமைக்கலாம், இது சாதாரணமாக நம்ம மசாலா சேர்த்து செய்யக்கூடிய வகை, ஆனால் மசாலா அளவு தான் வேறுபடும், சரியாக போட்டு செய்தால் ருசியும் அருமையாக இருக்கும்..இது நண்டு,இறாலின் ருசியுடன் இருக்கும்.நீங்கள் விரும்பியவற்றுடன் இணைத்து சாப்பிடலாம்.
கூடிய மட்டில் அப்பளம் சேர்த்து சாப்பிடவும்
கோழி இறச்சி கறி சிங்கப்பூர் ஸ்பெஷல்
தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 2
புதினா - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவையான அளவு
எண்ணெயில் வறுத்தரைக்க:
தனியா - 2 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 6
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 கப்
தாளிக்க:
பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பட்டை - சிறு துண்டு
செய்முறை:
*சிக்கனை சுத்தம் செய்து வைக்கவும்.
*வறுக்க குடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.
*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.
*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+அரைத்த மசாலா+புதினா ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*நன்கு வதங்கியதும் சிக்கன்+உப்பு சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக வைக்கவும்.தண்ணீர் ஊற்ற வேண்டாம்.
*சிக்கன் தண்ணீர் விடும்,தண்ணீர் சுண்டும் வரை நன்கு பொன்முறுவலாக சேர்த்து கிளறி இறக்கவும்
பாபா மசாலா இருந்தால் சேர்த்துக்கொள்ளுங்கள்
மட்டன் குழம்பு செட்டிநாடு வகை
செட்டிநாட்டு மட்டன் குழம்பு
மட்டன் குழம்பு என்றாலே அது செட்டிநாட்டு மட்டன் குழம்பு தான், அந்த குழம்பை அடித்துக் கொள்ள வேறு எந்த மட்டன் குழம்பாலும் முடியாது. காரணம் இதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் எல்லாமே நாம் கைகளால் இடித்து போடுவதாலும், எந்த வித கடை மசாலாக்கள் சேர்க்காததாலும், குழம்பின் மணம் ஊரையே அழைக்கும். காரமான குழம்பை சாப்பிட நினைப்பவர்கள் இதை முயற்சி செய்யலாம். சரி தேவையான பொருட்களுக்கு போவோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் (இளம் ஆட்டுகறி) 1/2 கிலோ
சீரகம் - 1 டீஸ் ஸ்பீன்
மிளகு - 1 டீஸ் ஸ்பீன்
சோம்பு -1 டீஸ் ஸ்பீன்
பட்டை - இரண்டு விரல் அளவு
லவங்கம் - 1 டீஸ் ஸ்பீன்
நட்சத்திர பூ - மூன்று துண்டு
காய்ந்த மிளகாய் - 6
இஞ்சி - பாதி உள்ளங்கை அளவு
பூண்டு - பெரிய பூண்டு 2
பச்சை மிளகாய் - 4 கீறியது
கருவேப்பிளை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு
தக்காளி - 2 பெரியது, சின்னதாக இருந்தால் 3
சின்ன வெங்காயம் - 1/2 கிலோ
செய்முறை
இளங்கறியாக இருந்தால் அதை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும், கொஞ்சம் முத்தின கறியாக இருந்தால் தனியாக குக்கரில் போட்டு கொஞ்ச நேரம் வேக வைக்கவும். (இளங்கறியை எப்படி கண்டுபிடிப்பது, இளங்கறி என்பது பார்ப்பதற்கு ரோஸாக இருக்கும், முத்தின கறி என்பது சிகப்பாக இருக்கும். எல்லாரும் சிகப்பாக இருப்பது தான் நல்ல ஆரோக்கியமான ஆட்டின் கறி என்று அதை வாங்கிக் கொண்டு போய், ஒரு துண்டை அரை மணி நேரமாக மென்றுக் கொண்டு இருப்பார்கள். அதே
போல ஆட்டு உடலில் மிகவும் ருசினான பகுதி என்பது ஆட்டின் முன் இரண்டு
கால்களில் இருக்கும் சதை தான்)
இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், மிளகு, நட்சத்திர பூ, காய்ந்த மிளகாய் அனைத்தையும் போட்டு வாணலில் நன்றாக வதக்கவும், அது பொன் நிறத்தில் மாறியவுடன். அதை எடுத்து அம்மியில் போட்டு அரைக்கவும். இந்த காலத்தில் யாரிடம் அம்பி இருக்கிறது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அம்பியை எல்லாம் மியூஸியத்தில் தான் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன். மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்பு சின்ன வெங்காயத்தையும், தக்காளியையும் நன்றாக வதக்கி விட்டு அதையும் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் மண் சட்டு இருந்தால் அதை வைக்கவும், அப்படி இல்லை என்றால் சாதாரண அடிப்பிடிக்காத பாத்திரத்தை வைக்கவும், எண்ணையை கொஞ்சமாக ஊற்றிக் கொள்ளவும், காரணம் ஏற்கனவே வதக்கிய பொருட்களில் எண்ணை இருப்பதால், எண்ணையை கொஞ்சமாக விட்டு விடவும்.
முதலில் கருவேப்பிலையை போடவும், அப்புறம் பச்சை மிளகாய் அப்புறம் அரைத்து வைத்து இருக்கும் மசாலாவை போடவும். கொஞ்ச நேரம் கழித்து தக்காளி வெங்காயம் அரைத்ததை போடவும். நன்றாக கிளறி விடவும். அதன் பின் கறியை போடவும். கலருக்காக கொஞ்சம் மிளகாய் பொடியை தூவிக் கொள்ளலாம், மசாலா நன்றாக கறியில் ஏறும் வரை கறியை அடிபிடிக்காமல் கரண்டியால் புரட்டவும். அளவான தண்ணீரை ஊற்றி விட்டு அடுப்பில் தாழ்வான நெருப்பை வைத்து விட்டு அரை மணி நேரம் வேக வைக்கவும், கறி பஞ்சு பஞ்சாக ஆகும் வரை. அதன் பின் தேங்காயை தேவையான அளவு 3 பத்தை எடுத்துக் கொண்டு அதை அரைத்து குழம்பில் போட்டு, கொத்தமல்லியையும் கலந்து 10 நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும்.
அருமையான காரமான சுவையான செட்டிநாட்டு மட்டன் குழம்பு ரெடி. இதை நீங்கள் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம், சப்பாத்தி, இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த குழம்பின் சுவை சாப்பிட்டு முடித்த பின்னும் நாக்கிலே ஒட்டிக் கொண்டு இருக்கும்.
ராஜீவ் காந்தி கொலை, விடை தெரியாத வினாக்கள்
ராஜீவ் காந்தி கொலை: விடை தெரியாத வினாக்கள்: விடுபடாத புதிர்கள்: பழைய ஆவணங்கள் பேசுகின்றன.
தமிழன் எக்ஸ்பிரஸ் வார ஏடு நவம்பர் 19, 1997-ல் யாருக்காக ராஜீவ் கொலை செய்யப்பட்டார்? விடை தெரியாத திடுக்கிடும் கேள்விகள்…. என்று சுதாங்கன் எழுப்பிய கேள்விகளுக்கு 2009 வரை விடை கிடைக்கவில்லை. நாடு முழுவதும் இன்று ஜெயின் கமிஷன் மீதே கவனம் செலுத்துகிறது. அதே சமயம் பூந்தமல்லியில் ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் முடிந்து விட்டன. இந்த நீதிமன்றத்தின் நீதிபதி, ‘வழக்கின் தீர்ப்பு 1998 ம் ஆண்டு ஜனவரி 28 அன்று வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார்.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 26 பேரும், தேசத்தின் குடிமக்களும் இந்தத் தீர்ப்பை எதிர்நோக்கி ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் குற்றவாளிகளின் சார்பில் எதிர்தரப்பு வாதம், 50 நாட்கள் நடைபெற்றது. இரகசியமாக நடந்த இந்த வாதங்களின் பல முக்கியப் பகுதிகள் தமிழன் எக்ஸ்பிரஸுக்குக் கிடைத்தன. சொல்லப்படாத பல பின்னணிக் கதைகளை வாசகர்கள் முன் கொண்டு வருகிறோம்.குற்றம் சுமத்தப்பட்டவர்கள், ராஜீவ் கொலையை விசாரித்த விசேஷ புலனாய்வுத் துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழக போலீஸின் பாதுகாப்புடன் எதிர்தரப்பு வாதம் நடந்தது.
1993 ம் ஆண்டு தொடங்கிய இந்த வழக்கு, 50 மாதங்கள் நடந்தது. 288 சாட்சியங்கள், 3000 அரசுத்தரப்பு ஆவணங்கள், 1000 எதிர்தரப்பு ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டன. எதிர்தரப்பு வாதத்தில் எழுந்த பல கேள்விகளுக்கு விடையில்லை. சிறப்பு புலனாய்வுத் துறையின் இந்த விசாரணைகள், அதிகாரத்திலுள்ளவர்களின் அன்பைப் பெறும் வகையில் தான் நடந்தது என்று சந்தேகப்பட வைக்கிறது.
ராஜீவ் கொலை ஒரு வி.ஐ.பி.யின் மரணம் மட்டும் அல்ல; தேசத்தை சிதறச் செய்யும் மிகப் பெரிய சதி. பல அந்நிய சக்திகள் இந்தப் பரந்த தேசத்தைக் கட்டியாள நினைக்கும் தந்திரம். அதனாலேயே இந்த வழக்கிலுள்ள பல திடுக்கிடும் சம்பவங்கள், விசாரணையின் ஓட்டைகள் ஆகியன நமக்குத் தெரிய வேண்டியது மிக முக்கியம்.
இந்த விசாரணையில் எதிர்தரப்பு வாதங்களைத் தொடக்கி வைத்தவர் மூத்த வழக்கறிஞரான துரைசாமி. ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த நீதிமன்ற அறையில் விசேஷ புலனாய்வுத் துறையின் ‘முன் ஜோடிப்பு கதைகளை’ போட்டு உடைத்தாராம் துரைசாமி. அதேபோல் எதிர்தரப்பு வழக்கறிஞர் ராமதாஸும் தன் 11 நாட்கள் வாதத்தில் குற்றப் பத்திரிகையில் புனையப்பட்டுள்ள பல கற்பனைக் கதைகளை சாட்சியங்களோடு வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்.
இந்த எதிர்தரப்பு வாதங்களின் க்ளைமாக்ஸாக அமைந்தது வழக்கறிஞர் சந்திரசேகரின் கடும்வாதம். ஆதார பூர்வமாகவும், உணர்ச்சிகரமாகவும் பேசிய சந்திரசேகர், விசேஷ புலனாய்வுத்துறை ஏற்கனவே முடிவு செய்து தங்கள் முடிவுகளுக்கு ஏற்ப வழக்கை ஜோடித்ததாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். ‘நான் கேட்கிற சாட்சியங்களை புலனாய்வுத்துறை காட்டிவிட்டால் என் கட்சிக்காரர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக தாங்களே முன்வந்து ஒப்புக் கொள்வார்கள்’ என்று கூட சவால் விட்டார்.
இப்படி ஐம்பது நாட்கள் நடந்த எதிர்தரப்பு வாதங்கள் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இதோ அந்த விடை கிடைக்காத கேள்விகள்:
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் எப்படி ஒப்புக் கொண்டார்?
2. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?
3. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி. சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?
4. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?
5. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்திலிருந்து சர்க்யூட் ஹவுஸுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?
6. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?
7. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் தோட்டம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
8. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
9. யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?
10. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் த. பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?
11. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
12. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார்.
13. உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
14. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
15. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ‘ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது’ என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். ‘அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்?’ என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?
16. மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு.
17. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் தன் கணவருடனும் வழக்கறிஞர் மகேந்திரனுடனும் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவேயில்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?
18. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
19. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப் படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். ‘வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.
20. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
21. சிவராசன், தனு, சுபா ஆகியோர் ஒரு அந்நிய சக்தியின் தூண்டுதலால் ஏன் இந்தக் கொலையை செய்திருக்கக் கூடாது? அந்த மூவரும் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பதால் மட்டுமே அவர்களைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி விசாரணையை முடித்துவிட்டார்களா?
22. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?
23. பிரபாகனும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத் துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
24. ‘விசேஷ’ இலட்சியமுள்ள அரசியல்வாதிகள், ஏன் அவரது காங்கிரஸ் தோழர்களே கூட தங்கள் வளர்ச்சிக்கு ராஜீவ் தடையாக இருக்கிறார் என்பதால் கூலிப்படையினரை ஏவிவிட்டு ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
25. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?
26. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது?
27. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
28. புலிகளின் ‘இந்துத்துவா’ அபிமானம், இலங்கைத் தமிழர்களுக்கு உண்டான இந்து வெறி இரண்டையும் பயன்படுத்தி ஆர். எஸ்.எஸ். பிஜேபி இலங்கைத் தமிழர்கள் மூலமாக ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது? அவர்கள் ஆட்சியைப் பிடிக்க தடையாக இருக்கும் ஒரே தலைவர் ராஜீவ் தான். மகாத்மாவைக் கொன்றவர்கள் ஏன் ராஜீவைக் கொன்றிருக்கக்கூடாது?
29. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீபெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தினார்? தன்னை அறியாமல் சிக்கி ராஜீவ் மரணப்படுக்கையில் விழக் காரணமாகி விட்டாரா?
30. யார் இந்த பொட்டு அம்மான்? இப்படி ஒரு நபர் இருக்கிறாரா? அம்மான் ஒரு மூத்த தலைவர். ஒரு போரில் இறந்துவிட்டார். பொட்டு மட்டுமே உள்ளார் என்கிறது எல்.டி.டி.ஈ. வட்டாரம். உயிருடன் இல்லாத ஒரு நபரை எப்படி இரண்டாவது குற்றவாளியாக புலனாய்வுத்துறை முத்திரை குத்தியது?
31. பத்மநாபா கொலை வழக்கையும், இந்த வழக்கையும் ஒப்பிட்டால் பல உண்மைகள் வெளிவருகின்றன. தமிழ்நாடு காவல்துறையின் ‘க்யூ’ பிராஞ்ச், பத்மநாபா வழக்கை விசாரித்தது. விசேஷப் புலனாய்வுத்துறை, ராஜீவ் கொலை வழக்கை விசாரணை செய்தது. இரண்டு விசாரணை அமைப்புகளும் சதி நடந்த இடம் யாழ்ப்பாணம் என்கின்றன. பத்மநாபா வழக்கில் குற்றவாளிகளில் சிவராசன். ராஜீவ் வழக்கில் அவர் முக்கிய குற்றவாளி. அப்படியானால் ராஜீவ் கொலையில் குற்றவாளியாகக் கருதப்பட்ட பிரபாகரன் பத்மநாபா வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை? ஆகவே பிரபாகரன் பெயரை நுழைப்பது அரசியல் முடிவே தவிர விசாரணையினால் கிடைத்த தெளிவே அல்ல. கடும் உள்நோக்கத்துடன் வழக்கிற்கு உயிர்கொடுக்க புலனாய்வுத்துறை செய்த முயற்சி இது.
32. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி. ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ‘ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை’ என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன் கொலை செய்ய வேண்டும்?
33. இந்தியா மற்றும் தமிழகத்தில் தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்தார்?
34. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? காங்கிரஸ் மற்றும் அதன் தொண்டர்களின் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
35. ஸ்ரீபெம்புதூருக்கு செல்லும் முன் இரண்டு தெருமுனைக் கூட்டங்களில் பேசினார் ராஜீவ். அந்தக் கூட்டங்களில் மேடை வரை உடன் வந்தார் வாழப்பாடி ராமமூர்த்தி. ஸ்ரீபெரும்புதூரில் மட்டும் ஏன் தொலை தூரம் தள்ளிப்போனார்?
36. அப்பாவிப் பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள் பலர் ராஜீவுடன் உயிரிழந்தார்கள். ஆனால் காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கும் இலேசான காயம் கூட இல்லையே. அது ஏன்?
37. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்பட வில்லை?
38. பிரபாகரன், சிவராசன் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட பழைய படத்தை வைத்துக் கொண்டு பிரபாகரனுக்கு இதில் தொடர்பு உண்டு என்று எப்படிச் சொல்லலாம்?
39. தனு, சுபா, சிவராசன் மூவரும் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, மேற்கத்திய, ஐரோப்பா, இந்தியா கூலிப்படையின் கையாட்களாக ஏன் ஆகியிருக்கக்கூடாது?
40. மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
41. சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி மூவருக்கும் இந்த வழக்கில் ஏதாவது தொடர்பு உண்டா என்கிற கோணத்தில் விசாரணை நடந்ததா?
42. புலிகள் இந்தக் கொலையை செய்ததின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த ஆதாயம் என்ன? அமெரிக்கா போன்ற மிகப் பெரிய வல்லரசுகள், சி.ஐ.ஏ. மூலமாக, ஏராளமான ஆயுத உதவிகளும் செய்து இந்தக் காரியத்தை செய்ய வைத்தார்களா?
43. யாரோ சிலரைப் பிடித்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ.யும், விசேஷ புலனாய்வுத் துறையும் எதற்கு?
தீர்ப்பு விரைவில் வெளிவரப் போகிறது. குறிப்பாக ஜெயின் கமிஷனின் இடைக்கால அறிக்கையைத் தொடர்ந்து சட்ட வல்லுநர்கள் இந்தத் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பல கேள்விகள் சிறப்பு புலனாய்வுத் துறையின் விசாரணையைப் பற்றி எழுந்திருக்கிறது.
கேள்விகள் எல்லாம் உண்மைகள் ஆகிவிடாது. ஆனால் பல சந்தேகங்கள் களையப்படாவிட்டால் உண்மைக் குற்றவாளிகள் பலம் வாய்ந்த சக்திகளுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டு விடுவார்கள். மறைந்து நிற்கும் அவர்களால் பலம் வாய்ந்த இந்திய தலைவக்களுக்குத் தான் ஆபத்து.
‘விசேஷப் புலனாய்வுத் துறை விசாரித்ததா, அல்லது வெறும் விசாரணை அறிக்கை தயார் செய்ததா?’ என்கிற பில்லியன் டாலர் கேள்விக்கான விடை நிச்சயம் ஒவ்வொரு இந்தியனுக்கும் தெரியவேண்டும்.
நன்றி : மரு . பாரதி செல்வன்
நண்டு மசாலா
நண்டு - 1 கிலோ
தேங்காய் பால்- ஒரு கப்
மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை- ஒரு கொத்து
மிளகுதூள்- அரை ஸ்பூன்
வெங்காயம்-2
தக்காளி-3
இஞ்சி பூண்டு விழுது- 4 ஸ்பூன்
பட்டை-1
ஏலக்காய்-3
கிராம்பு-3
பிரிஞ்சி-1
நண்டை மேல் ஓடு நீக்கி இரண்டாக வெட்டி சுத்தம் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை நடுவில் கீறி மட்டும் வைக்கவும். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை,ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி சேர்க்கவும். பட்டை முறிந்து வந்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய் சேர்க்கவும். பின்னர் வெங்காயம்,உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி பின்னர் மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். மிளகாய் தூள் வாசம் (நெடி) போனதும் தக்காளியை பிசைந்து/நறுக்கி சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்
எண்ணெய் பிரிந்து ஓரத்தில் வரும் ஸ்டேஜில் நண்டை சேர்த்து 5 நிமிடம் பிரட்டவும். மசாலா அனைத்திலும் ஒட்டியவுடன் தேங்காய் பாலை சேர்த்து வேகவிடவும்.
15 நிமிடங்கள் லோ ப்ளேமில் வேக வைத்த பின் மிளகுதூளை சேர்த்து 5 நிமிடம் ஹை ப்ளேமில் நீர் வற்ற கிளறி பின்னர் இறக்கவும்.
சுவையான நண்டு மசாலா தயார். கிரேவியின் அளவு அவரவர் விருப்பத்திற்கு தகுந்தது போல் மாற்றிக்கொள்ளலாம். அதிகமாக வற்ற விடாமல் குழம்பாகவும் உபயோகிக்கலாம். சாம்பார், ரசம் உடனும் வெறும் மசாலவை சாதத்தில் பினைந்தும் சாப்பிடலாம்.
அப்பளம் சேர்த்து சாப்ட்டுட்டு சொல்லுங்க அடடா .......
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
